எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லுாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாள் சோதனை
எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லுாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாள் சோதனை
ADDED : ஜன 05, 2025 01:59 AM

வேலுார்:வேலுாரில், தி.மு.க.,-- எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லுாரியில், இரண்டாவது நாளாக நேற்று, அமலாக்க துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல்லுாரி பண பரிவர்த்தனை விபரங்கள் மற்றும் கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்கப்பட்டுஉள்ள ஆவண விபரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை 7:00 முதல் மதியம்2:18 மணி வரை கதிர் ஆனந்த் வீட்டின் வெளியே அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். துபாய் சென்றிருந்த எம்.பி., கதிர் ஆனந்த், இ - மெயில் மூலமாக, வேலுார் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க., செயலருமான சுனில் குமார், காட்பாடி வடக்கு பகுதி தி.மு.க., செயலர் வன்னியராஜா, வழக்கறிஞர் பாலாஜி முன்னிலையில் சோதனை நடத்த அனுமதி அளித்தார்.
தொடர்ந்து, சோதனை தொடங்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் சுத்தி, உளி, கடப்பாரை கொண்டு அறைகள் உடைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்று அதிகாலை, 1:30 மணியளவில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை முடிந்தது. தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில், சோதனை நிறைவடைந்த நிலையில், அங்கு, 20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லுாரியில், 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், கல்லுாரி நிர்வாகம் செய்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள்,கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், கல்லுாரி பணம் வைக்கும் அறை ஆகியவற்றை சோதனை செய்தனர்.
கல்லுாரி பணம் வைக்கும் அறையில், கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டறிந்து, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வங்கி ஊழியர்கள்வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
கல்லுாரியில், நேற்றும் இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்தது. காலை வழக்கம்போல் கல்லுாரி திறக்கப்பட்டது, ஊழியர்கள், மாணவ - மாணவியர் உள்ளே சென்றபோது பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
கல்லுாரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொங்கல் பண்டிகையையொட்டி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருந்த போனஸ் மற்றும் சம்பள தொகை மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரிடம் வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணம் என, கல்லுாரிநிர்வாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
கல்லுாரியில் சோதனை நீடிப்பதால், துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள், வளாகம் முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.