ரூ.3 லட்சம் கேட்டு பொறியாளர் கடத்தல்; சில மணி நேரத்திலேயே மீட்ட போலீசார் சில மணி நேரத்திலேயே மீட்ட போலீசார்
ரூ.3 லட்சம் கேட்டு பொறியாளர் கடத்தல்; சில மணி நேரத்திலேயே மீட்ட போலீசார் சில மணி நேரத்திலேயே மீட்ட போலீசார்
ADDED : அக் 08, 2024 05:03 AM

மதுரை : மதுரையில் ரூ.3 லட்சம் கேட்டு கட்டட பொறியாளர் கடத்தப்பட்ட விவகாரத்தில் சில மணி நேரத்திலேயே அவரை மீட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் மணிமுத்து 50. கட்டட பொறியாளர். இவரது நண்பர் செல்லுார் திவாகர் 35. பலசரக்கு கடை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டது.
இவருக்கு தொழில் வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பாடு செய்து தருவதாக மணிமுத்து கூறினார். இதை நம்பிய திவாகரிடம் கடனுக்கான நடைமுறை செலவுத்தொகையாக மணிமுத்து ரூ.1.50 லட்சம் பெற்றார். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகும் கடன் பெற்றுத்தராததால் ரூ.1.50 லட்சத்தை திவாகர் திருப்பி கேட்டார். 'அவசரப்பட வேண்டாம். ஏற்பாடு செய்து வருகிறேன்' என மணிமுத்து தொடர்ந்து சமாளித்து வந்தார்.
தன்னை ஏமாற்றுவதாக கருதிய திவாகர், தனது நண்பர் விக்னேஷ் உள்ளிட்டோரிடம் ஆலோசித்தார். மணிமுத்துவை கடத்தி பணத்தை கேட்க திட்டமிட்டனர். நேற்றுமுன்தினம் இரவு மாட்டுத்தாவணி பகுதியில் வந்த மணிமுத்துவை காரில் கடத்தினர்.
அவரது அலைபேசியில் இருந்து மனைவியிடம் பேசி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து போலீசிற்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ., தியாகப்ரியன் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். சில மணி நேர தேடுதலுக்கு பின் திருப்பாலை பகுதியில் கடத்தல்காரர்கள் இருப்பது தெரிந்தது. அவர்களை சுற்றி வளைத்து உடல் முழுவதும் காயம்பட்டிருந்த மணிமுத்துவை மீட்டனர்.
கடத்தியவர்கள் திவாகர், அவரது சகோதரர் தாமரை 34, நண்பர்கள் ஆரப்பாளையம் விக்னேஷ் 32, எல்லீஸ்நகர் ராஜா 39, ஆகியோர் எனத்தெரிந்தது. அவர்களை கைது செய்து மணிமுத்துவை மீட்ட போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.