தினமலர் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி :28ல் தாம்பரம், 29ல் அண்ணா நகரில் நடக்கிறது
தினமலர் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி :28ல் தாம்பரம், 29ல் அண்ணா நகரில் நடக்கிறது
ADDED : ஜூன் 21, 2025 08:54 PM

சென்னை:'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி' நிகழ்ச்சி, வரும் 28, 29ம் தேதிகளில் சென்னை தாம்பரம், அண்ணா நகர் பகுதிகளில் நடக்க உள்ளது.
அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.
பி.இ., - பி.டெக்.,
இந்த கவுன்சிலிங்கை, டி.என்.இ.ஏ., என்ற இணையதளத்தின் வாயிலாக, தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.
இந்நிலையில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கவுன்சிலிங் குறித்து வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி' நிகழ்ச்சி, மாநிலம் முழுதும் நடத்தப்படுகிறது.
கடந்த 14ம் தேதி, சென்னை தி.நகர், குன்றத்துாரில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி, தாம்பரம் ராஜகோபால் திருமண மஹாலில், காலை 10:00 முதல் 1:00 மணி வரை நடக்க உள்ளது.
ஆன்லைன் கவுன்சிலிங்
மேலும், அண்ணாநகர் மேற்கு எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரியில், 29ம் தேதி காலை 10:00 முதல் 1:00 மணி வரை, 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி' நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியான 'சாய்ஸ் பில்லிங்' பதிவிடுவதற்கான வழிமுறைகள், 'புரவிஷனல் அலாட்மென்ட்' பெறுதல், இந்தாண்டு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோரின் சந்தேகங்கள் உள்ளிட்டவற்றுக்கு, கல்வி ஆலோசகர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
மேலும், 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது; நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன; 'கோர்' இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், வேலைவாய்ப்பு மிகுந்த படிப்புகள் உள்ளிட்டவற்றையும் கேட்டு தெளிவு பெற முடியும்.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர், நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். அனுமதி இலவசம்.