இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு; இன்னும் 36,446 இடங்கள் காலி
இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு; இன்னும் 36,446 இடங்கள் காலி
ADDED : ஆக 28, 2025 09:05 AM

சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது. முதல் முறையாக, 80 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. ஆனாலும், 36,446 இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 423 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 2025 - 26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், கடந்த மாதம், 7ம் தேதி துவங்கியது.
சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 90,624 பி.இ., - பி.டெக்., இடங்களில், ஒரு லட்சத்து, 45,481 இடங்கள் நிரம்பின.
அதன் பின், இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங், கடந்த 21ம் தேதி துவங்கியது. இதில், 7,964 மாணவ - மாணவியருக்கு, பி.இ., - பி.டெக்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டன.
இந்நிலையில், எஸ்.சி., - எஸ்.சி.ஏ., பிரிவினருக்கான கவுன்சிலிங், கடந்த 25ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், 729 மாணவ - மாணவியருக்கு, இன்ஜினியரிங் 'சீட்' ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொழிற்கல்வியில், நான்கு பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
இதன் வாயிலாக, இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 90,624 இடங்களில், ஒரு லட்சத்து 54,178 இடங்கள் நிரம்பியுள்ளன. முதல் முறையாக, 80 சதவீத சீட்கள் நிரம்பி உள்ளன. இன்னும், 36,446 இடங்கள் காலியாக உள்ளன.
இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 18 'சீட்'கள், நிரம்பாமல் காலியாக உள்ளன. இவற்றை ஏற்கனவே உள்ள, 'உயர்வுக்கு படி' திட்டத்தின் வழியே, நிரப்பிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

