இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நிறைவு; 1.45 லட்சம் பேருக்கு சீட்; 42,000 இடங்கள் காலி
இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நிறைவு; 1.45 லட்சம் பேருக்கு சீட்; 42,000 இடங்கள் காலி
UPDATED : ஆக 21, 2025 08:04 AM
ADDED : ஆக 21, 2025 01:26 AM

சென்னை:இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள இடங்களில், 1.45 லட்சம் இடங்கள் நிரம்பின.
அண்ணா பல்கலையின் கீழ், 423 இன்ஜினியரிங் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஒரு லட்சத்து 88,064 பி.இ., பி.டெக்., இடங்கள் உள்ளன. இதற்கான 2025 - 26ம் கல்வியாண்டு கவுன்சிலிங், கடந்த மாதம் 7ல் துவங்கியது.
சிறப்பு பிரிவு மற்றும் பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவில், மொத்தம் 1 லட்சத்து 45,481 மாணவ - மாணவியருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகை யில், 75 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 42,537 இடங்கள் காலியாக உள்ளன.
நடப்பாண்டு, இன்ஜி., படிப்பில் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் எனும் இ.சி.இ., பாடங்கள், மாணவர்களின் அதிக தேர்வாக இருந்தன. கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை மட்டும், 55 சதவீத மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினி யரிங் பாடங்களை, அதிகளவிலான மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
* அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, எம்.ஐ.டி., மற்றும் அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரிகளில் உள்ள மொத்த இடங்களும் நிரம்பின.
* பொதுப்பிரிவு கவுன்சிலிங் நிறைவில், மொத்தம் 39 கல்லுாரிகளில், 100 சதவீதம் சேர்க்கை நடந்துள்ளது
* 118 கல்லுாரிகளில், 95 சதவீத இடங்கள் நிரம்பின.
* 292 கல்லுாரிகளில், 50 சதவீத சீட் மட்டுமே நிரம்பியுள்ளன.
* 32 கல்லுாரிகளில், 10 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
* 19 கல்லுாரிகளில், ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடந்துள்ளது.
* மூன்று கல்லுாரிகளில், ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. இந்நிலையில், துணை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.