கட்டுமான திட்டத்தை பதிவு செய்யவே 3 மாதமாக்கும் ரியல் எஸ்டேட் ஆணையம்; பொறியாளர்கள் புகார்
கட்டுமான திட்டத்தை பதிவு செய்யவே 3 மாதமாக்கும் ரியல் எஸ்டேட் ஆணையம்; பொறியாளர்கள் புகார்
ADDED : ஏப் 01, 2025 04:48 AM

சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், கட்டுமான திட்டங்களை பதிவு செய்ய, மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் போன்றவை உள்ளன.
சட்ட விதிகளின்படி, 5,381 சதுர அடி, அதற்கு மேற்பட்ட நிலபரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான திட்டங்களையும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கட்டுமான திட்டங்களை மேற்கொள்வோர், அரசு துறைகளில் ஒப்புதல் பெற்றவுடன், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், கட்டுமான திட்ட அனுமதிக்கு அளித்த ஆவணங்களை, மீண்டும் இங்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
தற்போது சில மாற்றங்கள் செய்து, கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் துறைகளே, 5,381 சதுர அடி, அதற்கு மேற்பட்ட திட்டங்கள் குறித்த ஆவணங்களை, 'ஆன்லைன்' முறையில் ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு வழங்குகின்றன.
அந்த ஆவணங்கள் உடனடியாக கிடைத்தும், ஆணையத்தில் பதிவு நடவடிக்கைகள் தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதே, இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கட்டுமான பொறியாளர்கள் கூறியதாவது:
கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோர், அதற்கான ஆவணங்களை முதலில் நேரில் தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. இதையடுத்து, ஆன்லைன் முறை அமலுக்கு வந்துள்ளது.
இதிலும், திட்ட அனுமதி வழங்கும் துறைகள், அனைத்து ஆவணங்களையும் வழங்கிய பின், கட்டணம், வங்கி கணக்கு விபரங்களை மட்டுமே, கட்டுமான நிறுவனங்கள் செலுத்தினால் போதும்.
இதை கொடுத்த பின்னும், ஒரு திட்டத்தை பதிவு செய்ய, மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிஉள்ளது.
இதனால், வீடு, மனை விற்பனையை, குறித்த காலத்தில் மேற்கொள்ள முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது.
ரியல் எஸ்டேட் ஆணையத்தில் தேவையான பணியிடங்களை நிரப்பி, பதிவு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

