உலக பாரம்பரிய வார விழா கீழடியில் ஆங்கில குறும்படம்
உலக பாரம்பரிய வார விழா கீழடியில் ஆங்கில குறும்படம்
ADDED : நவ 20, 2025 02:54 AM

கீழடி: உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தில் இனி ஆங்கிலத்திலும் குறும்படம் ஒலி, ஒளிபரப்பாகும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
2023 மார்ச் 5ம் தேதி கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த பொருட்களால் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளை கவர அருங்காட்சியகத்தில் குளிர்சாதன வசதி கொண்ட மினி திரையரங்கில் கீழடி பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது. கீழடி அகழாய்வை வெளி கொணர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் உரையுடன் தமிழில் குறும்படம் இதுவரை திரையிடப்பட்டது.
உலகின் புராதன சின்னங்கள், பாரம்பரிய சின்னங்கள் உள்ளிட்டவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடம் தோறும் நவ 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரமாக கொண்டாடப் படுகிறது.
இதனையொட்டி கீழடி அருங்காட்சியகத்தில் ஆங்கிலத்திலும் குறும்படம் திரையிடப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருந்தால் ஆங்கிலத்திலும் தமிழக சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருந்தால் தமிழிலும் குறும்படம் திரையிடப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இத்தாலியில் இருந்து பேத் மற்றும் பெக்னும் ஜோடிகள் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தனர். ஆங்கிலத்தில் முதன் முதலாக திரையிடப்பட்ட குறும்படத்தை கண்டு ரசித்தனர்.
பேத், பெக்னும் கூறுகையில், அகழாய்வு குறித்த தொல்லியல் வல்லுனர்களின் கருத்து பண்டைய கால மக்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவியது.
கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் நாங்கள் நினைத்ததை விட பன்மடங்கு மதிப்பு வாய்ந்தது, என்றனர்.

