ADDED : நவ 13, 2024 11:34 PM
சென்னை: 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் இரண்டாம் கட்டம், நாளை துவக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, 'ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தை, முதற்கட்டமாக 2022ம் ஆண்டு செயல்படுத்தினேன். இதன் மூலம், குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளில், 77.3 சதவீத பேர், இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
தற்போது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்ட குழந்தைகளின், பாலுாட்டும் அம்மாக்கள் 76,705 பேருக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை, அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க, 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் இரண்டாம் கட்டம், 22 கோடி ரூபாயில், தமிழகம் முழுதும் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை, அரியலுார் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், நாளை துவக்கி வைக்க உள்ளேன்.
ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட, குழந்தைகளின் அம்மாக்கள், தமிழக அரசுடன் இணைந்து, அவரது குடும்பத்தினரும், அதிக கவனத்துடன் பராமரிக்க, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் முன் நின்று, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதன் வழியே, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, வலிமையான, வளமான மாநிலமாக, தமிழகத்தை நிலைநிறுத்த உறுதி ஏற்போம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.