வெற்றியை உறுதி செய்க!: தொண்டர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
வெற்றியை உறுதி செய்க!: தொண்டர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : ஏப் 18, 2024 01:33 PM

சென்னை: தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமை திமுக தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலை அறிவித்த நாளிலிருந்து திமுக தொண்டர்களாகிய நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.,வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.
நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு ஓட்டுகளாகப் பதிவாகி வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற ஓட்டுப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று தி.மு.க.,வினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான் இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமை திமுக தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
ஓட்டுப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் ஓட்டு எண்ணிக்கையின்போது திமுக கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் ஓட்டுப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள்... ஓட்டுரிமையை நிலைநாட்டுவோம்... மகத்தான வெற்றியை ஈட்டுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

