சேலத்தில் தி.மு.க., நடத்திய கேளிக்கை மாநாடு: ராஜு கேலி முன்னாள் அமைச்சர் ராஜு கேலி
சேலத்தில் தி.மு.க., நடத்திய கேளிக்கை மாநாடு: ராஜு கேலி முன்னாள் அமைச்சர் ராஜு கேலி
ADDED : ஜன 26, 2024 02:05 AM
மதுரை:''மொழிப் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என தி.மு.க., சொல்வதும்; செயல்படுவதும் மோசடியானது'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தெரிவித்தார்.
அ.தி.மு.க., மாணவரணி சார்பில் மதுரை தமுக்கத்தில் இருக்கும் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ராஜு கூறியதாவது:
மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தி.மு.க.,வுக்கு தகுதியில்லை. தமிழ் மொழிக்கு எதிராக பல்வேறு காரியங்களை செய்து கொண்டிருக்கும் தி.மு.க.,வினர், மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்பது நாடகம்; மோசடி.
தி.மு.க., மாநாட்டில் பல நகைச்சுவைகள் அரங்கேறின. அது உரிமை மாநாடு அல்ல; கேளிக்கை மாநாடு. 'நீட்'டுக்கு எதிராக தி.மு.க.,வினர் பெற்ற கையெழுத்து படிவங்கள் கீழே கிடந்தன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.
பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் வீட்டில் பட்டியலின பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூ., கட்சியினர் ஏன் வாய் திறக்கவில்லை?
தேர்தல் சீட்டுக்காகவும், பணத்திற்காகவும் வாய்மூடி மவுனிகளாகி விட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் தற்போது ஸ்டாலினும் வெளிவேஷம் போடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

