தொழில்முனைவோர் பயிற்சி திட்டம் பேக்கரிக்கு முதலிடம்; 'ட்ரோன்' 2வது இடம்
தொழில்முனைவோர் பயிற்சி திட்டம் பேக்கரிக்கு முதலிடம்; 'ட்ரோன்' 2வது இடம்
UPDATED : ஆக 06, 2025 08:02 AM
ADDED : ஆக 06, 2025 01:45 AM

சென்னை: தமிழக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், கட்டண அடிப்படையிலான திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு முதலிடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்ததாக, 'ட்ரோன்' இயக்கம், சிறுதானியங்களில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, 'யு டியூப் சேனல்' உருவாக்கம் போன்ற பயிற்சிகளை பெற பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், தமிழக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் செயல்படுகிறது.
கடந்த, 2021ல் துவக்கப்பட்ட இந்நிறுவனம், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் சுயவேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு இலவச பயிற்சி அளித்தது. பின், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என, மற்ற துறைகளின் தொழில் திட்ட பயனாளிகளுக்கு பயிற்சிகள் அளித்தது.
'யு டியூப்' சேனல் கடந்த 2023 இறுதியில், கட்டணம் அடிப்படையில், தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் புகைப்படம், வீடியோ எடுத்தல், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, ஏற்றுமதி வழிமுறை, 'யு டியூப்' சேனல் உருவாக்கம், தங்க நகை மதிப்பீட்டாளர், அழகு கலை உள்ளிட்ட, 20 தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி காலம், 3 - 5 நாட்கள். சிறந்த பயிற்றுநர்கள் வாயிலாக, குறைந்த கட்டணத்தில், நவீன தொழில்நுட்பத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி திட்டத்தில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். பயிற்சி முடித்த பலர், சொந்தமாக தொழில் துவக்கிள்ளனர். இதனால், பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி, 2023 - 24ல், 401 பேர், 2024 - 25ல், 1,213 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இந்தாண்டில் ஜூலை வரை, 976 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
பல்வேறு வசதி இதுகுறித்து, தமிழக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் அம்பலவாணன் கூறியதாவது:
தனியார் ஐ.டி., நிறுவனங்களுக்கு இணையாக, புத்தாக்க பயிற்சி நிறுவனம் பல்வேறு வசதிகளுடன், சிறந்த உள்கட்டமைப்பு சூழலுடன் உள்ளது.
இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவதுடன், பள்ளி, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புத்தாக்க மற்றும் தொழில் முனைவுக்கு ஊக்குவிக்கப்படுகிறது.
புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின் கீழ், சிறந்த தொழில் யோசனை வைத்திருப்பவருக்கு நிதியுதவி செய்யப்படுகிறது. பயிற்சி பெறுவோரிடம் இருந்து, பயிற்சி குறித்து கருத்து கேட்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, பயிற்சியாளர்கள் தொடர அனுமதிக்கப்படுவர்.
இதனால், சிறந்த தரத்தில் பயிற்சி அளிப்பது உறுதி செய்யப்படுகிறது. 'ட்ரோன்' இயக்கம், மின்னணு சந்தைப்படுத்துதல், சாட் ஜி.பி.டி., - ஏ.ஐ., என, சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி முடிப்பவர்களுக்கு தொழில் துவங்க ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.