வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான்
வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான்
ADDED : மே 04, 2025 03:39 AM
சென்னை: 'தமிழகத்தில் வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுகிறது' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த மேகரையான் தோட்டத்தில், தனியாக வசித்து வந்த முதியோர் ராமசாமி - பாக்கியம்மாள் ஆகியோர், கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது.
நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது.
குடும்பங்களை குறிவைத்து கொலைகள் நடக்கின்றன. ஒரே பகுதியில், அடுத்தடுத்து பலமுறை கொலை நடக்கிறது.
கொலைகளை தடுக்க முடியவில்லை; கொலையாளிகளையும் பிடிக்க முடியவில்லை என்றால், தமிழக காவல் துறை உண்மையில் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
தி.மு.க., அரசு, மீதமுள்ள ஓராண்டிலாவது சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தி, மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும், இதுபோன்ற கொடூர கொலைகள் நடக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

