ADDED : ஜூலை 03, 2026 12:58 AM

சென்னை: கல்வெட்டு அறிஞர் ராஜகோபால், 76; மாரடைப்பால், சென்னையில் நேற்று காலமானார்.
சிவகங்கை மாவட்டம், ஆத்தங்குடியை சேர்ந்தவர் ராஜகோபால். முதுநிலை வரலாறு, கல்வெட்டியல் படிப்புகளை முடித்து, தமிழக தொல்லியல் துறையில், 1975ல் கல்வெட்டு ஆய்வாளராக சேர்ந்தார். பயிற்றுனராகவும் செயல்பட்டார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், மொரப்பூர், அரூர், கெலமங்கலம், தஞ்சாவூர், பாபநாசம், நன்னிலம் பகுதிகளில் இருந்த கல்வெட்டுகளை, படியெடுத்து பதிப்பித்தார். கோவில், சிற்பம், நுண்கலைகள், அகழாய்வுகள் உள்ளிட்ட பிரிவுகளில், 33 ஆண்டுகள் பணியாற்றினார்.
தொல்லியல் சார்ந்து, 20க்கும் மேற்பட்ட நுால்கள், 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். நேற்று காலை, ஆய்வுநுால் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு, சென்னையில் காலமானார். இவருக்கு, பவானி என்ற மனைவி, சுப்பையா என்ற மகன், உமையாள் என்ற மகள் உள்ளனர்.
மறைந்த ராஜகோபாலின் உடல், அடையாறு, வெங்கடேஸ்வரா நகர், முதல்தெரு, 7, ராஜாஜி இல்லம் என்ற முகவரியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை, திருவொற்றியூர் செட்டியார் மடத்தில் தகனம் செய்யப்படும்.
