sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கபட நாடகத்தில் பி.எச்டி., பட்டம்; ஆளும் கட்சி மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

/

கபட நாடகத்தில் பி.எச்டி., பட்டம்; ஆளும் கட்சி மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

கபட நாடகத்தில் பி.எச்டி., பட்டம்; ஆளும் கட்சி மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

கபட நாடகத்தில் பி.எச்டி., பட்டம்; ஆளும் கட்சி மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

11


ADDED : நவ 12, 2024 01:03 PM

Google News

ADDED : நவ 12, 2024 01:03 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி., பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள்' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; கடந்த 42 மாத கால நிர்வாகத் திறனற்ற தி.மு.க., ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து, நவ.,10ல் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பிய போது, 42 மாதகால தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற வாரியப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என்று பதில் அளித்தேன்.

என்னுடைய இந்த கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது. யாருடைய பெயரும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், ஊடகங்களுக்கு முக்கிய குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் பி.இ.என். என்ற நிறுவனம் இந்த அறிக்கையை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.

மனம் போன போக்கில் உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு முதுகெலும்பில்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். கபட நாடகம் ஆடுவதில் பிஎச்.டி, பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

கடந்த 2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, இன்றைக்கு அவர்களை ஏமாற்றியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கடந்த 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, தி.மு.க., அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவிர, சுமார் 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தனர். அதில், 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லி வரும் இந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியிலோ, எனது தலைமையிலான அரசிலோ நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.

தெரிந்தோ, தெரியாமலோ கடந்த 42 மாதகால தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.18 ஆண்டு ஆட்சியில் இருந்த கருணாநிதி அதைச் செய்தார்; இதைச் செய்தார் என்ற புலம்பல்கள்தான் அந்த அறிக்கையில் அதிகமாக இருக்கிறதே தவிர, ஸ்டாலின் அரசு என்ன செய்தது என்று எதுவும் இல்லை.

பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக் கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க.,விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இனியும் உண்மை நிலைகளை உணராமல், இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது வெந்ததைத் தின்று வாய்க்கு வந்தபடி உளறித் திரிபவர்களைப்போல் பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார். எந்தெந்த வாக்குறுதிகள் வெளியிட்டு, நிறைவேற்றாமல் ஏமாற்றினர் என்பதையும் அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us