இ.பி.எஸ்., மீது வழக்குப்பதிவு செய்யலாம்: விசாரணைக்கு ஒத்துழைக்க ஐகோர்ட் உத்தரவு
இ.பி.எஸ்., மீது வழக்குப்பதிவு செய்யலாம்: விசாரணைக்கு ஒத்துழைக்க ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜன 22, 2025 05:37 PM
ADDED : ஜன 22, 2025 05:22 PM

சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., மீது வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும். போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சேலம் நீதிமன்றத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து இ.பி.எஸ்., தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், சேலம் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த வழக்கில் இ.பி.எஸ்., போலீசார் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், இ.பி.எஸ்., தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தலாம். விசாரணைக்கு இ.பி.எஸ்., முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.