பா.ஜ.வுடன் கூட்டணி எதற்காக; இ.பி.எஸ். வெளியிட்ட விளக்க பதிவு
பா.ஜ.வுடன் கூட்டணி எதற்காக; இ.பி.எஸ். வெளியிட்ட விளக்க பதிவு
ADDED : ஏப் 11, 2025 10:05 PM

சென்னை: வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்யவும் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளதாக இ.பி.எஸ்., கூறி உள்ளார்.
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவருக்கு இ.பி.எஸ்., தமது வீட்டில் விருந்து அளித்தார். அதன் பின்னர் அமித் ஷா டில்லி புறப்பட்டுச் சென்றார்.
பா.ஜ., வுடனான இந்த கூட்டணி எதற்காக என்பது குறித்து இ.பி.எஸ்., தமது எக்ஸ் வலைதள பதிவில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். தமது வீட்டில் அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தின் போது அவருடன் ஒன்றாக சாப்பிடும் போட்டோவையும் இ.பி.எஸ்., தமது பதிவில் வெளியிட்டு இருக்கிறார்.
தமது வலைதள பதிவில் இ.பி.எஸ்., கூறியிருப்பதாவது;
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் 2026 சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கைகோர்க்கும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது.
தி.மு.க.,வின் தீய ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கும், மாநில முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த வரலாற்று தவறுகளை சரி செய்வதற்கும், வளர்ச்சி,மேம்பாடு, புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் இந்த கூட்டணி ஒன்றுபட்டுள்ளது.
எனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு உணவில் கலந்து கொண்டு என்னை கவரவித்தற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரகாசமான வலுவான மற்றும் துடிப்பான தமிழகத்தை உருவாக்க பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வை, உறுதியான தீர்மானத்துடன் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.
இவ்வாறு இ.பி.எஸ்., அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

