எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார் இ.பி.எஸ்.,: மா.சுப்பிரமணியன் சாடல்
எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார் இ.பி.எஸ்.,: மா.சுப்பிரமணியன் சாடல்
ADDED : டிச 05, 2024 02:17 PM

சென்னை: 'எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தாம்பரம் மாநகராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததை குடித்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். அவர், சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உடல்நலக்குறைவு ஏற்பட்ட பகுதியில் 6 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 பேர் உயிரிழந்தார்களா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பல்லாவரத்தில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். குடிநீர் மாதிரி சோதனை தொடர்பான முடிவுகள் வர 3 நாட்கள் ஆகும். ஆய்வுக்கு பிறகு தெரிய வரும். ஆய்வு மாதிரிகளை விரைந்து வழங்க வலியுறுத்தி உள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதியில் மாநகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். பதற்றமான செய்திகளை பதிவிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.