ADDED : ஜன 03, 2025 05:13 AM

சென்னை: 'தி.மு.க., அரசை குறை கூற காரணங்களின்றி, ஒரே பொய்யை அரைத்து, மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும்' என, கோயபல்ஸ் பாணி பிரசாரத்தில் பழனிசாமி இறங்கி இருக்கிறார்.
தி.மு.க., ஆட்சியில் துணிச்சலாக, பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், புகார் அளித்தவர்களுக்கு மன உளச்சலை ஏற்படுத்தும் விதமாக, அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.
தினமும் அந்த நிகழ்வை நினைவூட்டுவதை, ஒரு அஜெண்டாவாக வைத்திருக்கும் பழனிசாமியின் நடவடிக்கைகள், பிறரை துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் மனநிலையை காட்டுகிறது.
தன் கட்டுப்பாட்டில் இருந்து, அ.தி.மு.க., கை நழுவி விடுமோ என்ற அச்சத்தில் இருந்த பழனிசாமி, அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தை வைத்து, தான் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிக்கும், மட்டமான அரசியலை செய்து வருகிறார்.
உயர் நீதிமன்றமே எதிர்க்கட்சிகளின் செயலை தாங்க முடியாமல், அவர்கள் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது. அ.தி.மு.க., என்ற கட்சி, இனி பழனிசாமி கையில் இருக்குமோ, இருக்காதோ என்ற வகையில், சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இதை திசை திருப்ப, உயர் நீதிமன்றமே கண்டித்த பின்னும், அரசியல் சுயநலத்திற்காக, பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலம் குறித்து, கொஞ்சமும் கவலையின்றி நடந்து வருகிறார் பழனிசாமி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

