இ.பி.எஸ்., போல் துரைமுருகன் மிமிக்ரி; சட்டசபையில் சிரிப்பலை!
இ.பி.எஸ்., போல் துரைமுருகன் மிமிக்ரி; சட்டசபையில் சிரிப்பலை!
ADDED : டிச 09, 2024 02:07 PM

சென்னை: சட்டசபையில் விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., போல், ஆவேசமாக அமைச்சர் துரைமுருகன் பேசியது, ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
டங்கஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடத்த விவாதத்தின் போது, அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., பதில் அளித்து பேசினார்.
அப்போது இ.பி.எஸ்., பேசியதாவது: அவையின் கவனத்திற்கு கொண்டு வருவது, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் இவ்வளவு பிரச்னை வந்து இருக்காது. மக்களும் போராடி இருக்க மாட்டார்கள். அதை தான் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.
இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் துரைமுருகன், இ.பி.எஸ்., போலவே ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு, மிமிக்ரி செய்யும் வகையில் இருந்தது. துரைமுருகன் பேசுகையில், ''எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உரக்கப்பேசுகிறார். நானும் பேசிவிடுவேன்.ஏற்கனவே இந்த திட்டத்துக்கு எல்லா முயற்சியும் எடுத்து, மத்திய சர்காருக்கு தெரிவித்த பிறகு தான் தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறோம்' என்றார். அவரது பேச்சும், குரலும், ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதைக்கண்ட எதிர்க்கட்சித்தலைவர் இ.பி.எஸ்., ''பேரவை தலைவர் அவர்களே ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படி தான் பேசி ஆகணும். வேற என்ன பேச முடியும்? சரக்கு இருந்தால் தான பேச முடியும். இப்படி பேசினால் என்ன அர்த்தம். ஆ ஊன்னா என்ன? சட்டமன்றம் தான? மூத்த உறுப்பினர் மக்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஆ ஊன்னா என்ன? இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். மக்களுடைய பிரச்னை உயிரை கொடுத்தும் காப்பாத்துவோம்,'' என்றார்.