எரிமலை மீது அமர்ந்திருக்கும் இ.பி.எஸ்.,: கம்யூ., பாலகிருஷ்ணன் 'நையாண்டி'
எரிமலை மீது அமர்ந்திருக்கும் இ.பி.எஸ்.,: கம்யூ., பாலகிருஷ்ணன் 'நையாண்டி'
ADDED : அக் 25, 2024 04:27 AM

செஞ்சி: செஞ்சியில் நேற்று நடந்த மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணி கட்சிகள் தி.மு.க.,வை தாங்கி பிடிக்கின்றன என்றும், கூட்டணியில் விரிசல் உள்ளதாகவும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுகிறார். ஜெ., இறந்த பின், அ.தி.மு.க.,வை ஒன்றாக அவரால் வைத்திருக்க முடியவில்லை.
அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என ஒரு அணியும், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர வேண்டும் என மற்றொரு அணியும், இப்படியே தொடரலாம் என ஒரு அணியும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்த மூன்று அணிகளின் போராட்டம் எப்போது வேண்டுமானாலும் எரிமலை போன்று வெடிக்கலாம். பழனிசாமி எரிமலை மீது உட்கார்ந்து இருக்கிறார். வெடித்தால் அவர் நிலைமை என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை உலக நாடுகளில் 30 சதவீதம் குறைந்துவிட்டது; ஆனால், இந்தியாவில் குறையவில்லை. இது குறித்து லோக்சபாவில் அரசு விவாதிப்பதில்லை. இந்த பிரச்னை மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மக்களை திசை திருப்ப, ஒரே நாடு; ஒரே தேர்தல் என்கின்றனர்.
பெரும்பான்மை இல்லாத பா.ஜ., அரசால், இதற்கான மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும். தி.மு.க., கூட்டணி சண்டை போட வேண்டும் என பழனிசாமி விரும்புகிறார். அவர் விருப்பத்தை நாங்கள் எப்படி நிறைவேற்ற முடியும்?
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடக்கிறது; கூட்டணி ஆட்சி இல்லை. நாங்கள் எங்கள் கருத்துகளை சுதந்திரமாக சொல்கிறோம். தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை தடுக்க, மத்திய அரசு இரண்டு மணி நேரம் இலங்கையுடன் பேசினால், பிரச்னை முடிந்து விடும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

