டங்ஸ்டன் விவகாரத்தில் என்னை பற்றி தவறான தகவல்! ஸ்டாலின் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
டங்ஸ்டன் விவகாரத்தில் என்னை பற்றி தவறான தகவல்! ஸ்டாலின் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
ADDED : டிச 09, 2024 07:37 PM

சென்னை: கனிம வள திருத்தச் சட்டத்தை பார்லி.யில் கொண்டு வந்தபோது, தி.மு.க., எம்.பி.,க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.
இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு; ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க., அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏல முறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப் பற்றி தம்பிதுரை பார்லி.யில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 பார்லி.யில் கொண்டு வந்த போது, தி.மு.க., எம்.பி.,க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.