கூட்டணிக்கணக்குடன் காத்திருக்கும் கொக்கு; வாழ்த்துச் சொல்லி விஜய்க்கு வலை வீசுவதன் பின்னணி!
கூட்டணிக்கணக்குடன் காத்திருக்கும் கொக்கு; வாழ்த்துச் சொல்லி விஜய்க்கு வலை வீசுவதன் பின்னணி!
UPDATED : அக் 23, 2024 07:13 PM
ADDED : அக் 23, 2024 01:05 PM

சென்னை: நடிகர் விஜயின் கட்சி மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து சிக்னல் கொடுத்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் சிக்னலுக்காக காத்திருக்கிறார். 'எல்லாம் எதிர்கால தேர்தல் கூட்டணிக் கணக்கு தான்' என்கின்றனர், கட்சியினர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அணிகள் தயாராகி வருகின்றன.
வெற்றிக்கூட்டணி கை நழுவி விடாமல் இருக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பகீரத பிரயத்தனம் செய்கிறார். அவ்வப்போது முரண்டு பிடிக்கும் வி.சி.க., கம்யூ., கட்சிகளை தாஜா செய்தும், தட்டிக் கொடுத்தும் கூட்டணியை தக்க வைக்க முயற்சிக்கிறார்.
அதே வேளையில், எப்படியாவது தி.மு.க., கூட்டணியில் இருந்து சில கட்சிகளை தட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று இ.பி.எஸ்., கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளார்.
அவ்வப்போது வி.சி.க., கம்யூ., காங்கிரஸ் கட்சிகளுக்கு நுால் விட்டுப் பார்க்கிறார். இத்தகைய சூழலில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதுக்கட்சி, தமிழக அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
முன்னணி நடிகரான விஜய்க்கு, எல்லாத்தரப்பிலும் ரசிகர்கள் அதிகம். அவரால், இரு முக்கிய கூட்டணிகளுக்கும் சேதாரம் ஏற்படும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
அப்பப்பட்ட சூழலில் வரும் 27ம் தேதி கட்சி மாநாட்டை விஜய் நடத்துகிறார். அதற்கான வேலைகளில் கட்சியினர் பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கும் வேளையில் அரசியல் தலைவர்கள் பலரும் விஜய் மாநாடு பற்றிய ஊடகங்களில் தொடர்ந்து பேசி, கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பல்வேறு கட்சிகளின் ஸ்டார் பிரமுகர்கள், முக்கிய புள்ளிகள் விஜய் அரசியல் பிரவேசம் பற்றி பேசி இருந்தாலும், நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான இ.பி.எஸ்., பேசி இருப்பது தான் இன்றைய தமிழக அரசியலின் ஹைலைட்டாக மாறி இருக்கிறது.
சேலத்தில் அவர் பேட்டி அளிக்கையில் வழக்கமான அரசியல் கேள்விகளுக்கு மத்தியில் நிருபர் ஒருவரிடம் இருந்து நடிகர் விஜயின் த.வெ.க., முதல் மாநாடு பற்றிய கேள்வி எழுகிறது. அதற்கு இ.பி.எஸ்., அளித்த பதில் வருமாறு;
திரையுலகில் முன்னணி நடிகராக அவர் விளங்கி வருகிறார். அவருக்கு ஒன்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரும் மக்களுக்கு பொது சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார்.
அவரது முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். விஜய் பொதுக்கூட்டத்துக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க., போராட்டங்களுக்கும் தி.மு.க., அரசு அனுமதி மறுத்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் அதிருப்தி உள்ளது. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தற்போது இடதுசாரிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். 2026ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க., தலைமையில் பலமான கூட்டணி அமையும்.
இவ்வாறு இ.பி.எஸ்., கூறி உள்ளார்.
அவரின் இந்த பேட்டி தற்போது அரசியல் களத்தில் அடுத்த கட்டத்துக்கான கூட்டணிக் கணக்குகளை உருவாக்கும் முகாந்திரம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இது குறித்து அவர்கள் கூறும் கருத்துகள் வருமாறு;
தமிழகத்தில் 2026ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இப்போதுள்ள தருணத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பது போல் தெரிகிறது. வெளியில் அப்படி தெரிவது போல் காணப்பட்டாலும் அது எத்தனை நாட்கள் அப்படியே இருக்கும் என்று தெரியவில்லை.
விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், ஆட்சி மீது அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள இ.பி.எஸ்., நினைக்கிறார்.
தி.மு.க., கூட்டணியில் அதிருப்தியுடன் இருக்கும் கட்சிகளுக்கு, தாம் ஒரு வாய்ப்பாக இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும்; அதன் மூலம் அங்கு குழப்பம் ஏற்படும்; அ.தி.மு.க.,வை காட்டி, அந்த கட்சிகள் தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று இ.பி.எஸ்., கணக்குப் போடுகிறார்.
இப்படி ஒரு பக்கம், தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் இ.பி.எஸ்., இன்னொரு பக்கம், புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் கட்சியை அரவணைக்கவும் முயற்சிக்கிறார். 'அந்த கணக்கில் தான், விஜய் நல்லவர், வல்லவர், மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்பது போல் சொல்லி ஆசை வார்த்தை காட்டுகிறார்'என்கின்றனர் கட்சியினர். தி.மு.க.,வை வீழ்த்த, விஜய், சீமான் உள்ளிட்டோர் தங்கள் கூட்டணியில் இருந்தால் வசதியாக இருக்கும் என்பது இ.பி.எஸ்.,ன் கணக்கு. ஆனால், வாழ்த்து சொல்லி வலை வீசி விட்டு, இ.பி.எஸ்., காத்திருக்கிறார் என்பதை விஜய் புரிந்து கொள்ளாதவர் இல்லை; அதனால் தான் அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.
மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டே விஜயின் அரசியல் கணக்கு ஆரம்பமாகும். அதன் பின்னரே எதிர்பாராத காட்சிகள் அரங்கேறலாம்; கொக்கு போல காத்திருக்கும் இ.பி.எஸ்., வலையில் விஜய் சிக்குவாரா, இல்லையா என்பதை மாநாட்டில் விஜய் பேசப்போவதை வைத்து ஓரளவு யூகிக்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.