ADDED : நவ 12, 2024 01:48 AM

கோவை: தேஜஸ் போர் விமானத்தின் முக்கிய பாகத்தை, கோவையைச் சேர்ந்த எல்.எம்.டபிள்யூ., நிறுவனம் தயாரித்து, அதன் முதல் கருவியை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு வழங்கியது.
இந்திய விமானப்படையில் இருக்கும் இலகு ரக போர் விமானம் தேஜஸ். இதன் அதிநவீன வடிவமைப்பான 'மார்க் 1, மார்க் 1ஏ' விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் -- ஹெச்.ஏ.எல்., உருவாக்கி வருகிறது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த விமானத்துக்கான, 'ஏர் இன்டேக் அசெம்பிளி' என்ற பாகத்தை தயாரிக்க, கோவை, எல்.எம்.டபிள்யூ., நிறுவனத்துடன், 2022ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பாகம், விமானத்தின் இன்ஜினுக்கு சீராக காற்று உட்செல்வதை உறுதி செய்கிறது.
எல்.எம்.டபிள்யூ., நிறுவனம் '40 ஏர் இன்டேக் அசெம்பிளி' பாகங்களை தயாரித்து வழங்க வேண்டும். இதன் முதல் பாகத்தை ஒப்படைக்கும் நிகழ்வில், எல்.எம்.டபிள்யூ., நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் வழங்கினார்.
நிகழ்வில், இரு நிறுவனங்களின் அலுவலர்கள் பங்கேற்றனர். ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில் சுயசார்பு அடையும் இலக்கில், 83 'தேஜஸ் மார்க் 1ஏ' போர் விமானங்களை தயாரிக்க, இந்திய விமானப்படை ஹெச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

