ஈரோடு இடைத்தேர்தல்: 'நோட்டா'வுக்கு ஓட்டு கேளுங்க கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தல்: 'நோட்டா'வுக்கு ஓட்டு கேளுங்க கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவு
ADDED : ஜன 24, 2025 06:51 PM
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடாத நிலையில், ஜனநாயக கடமையாற்ற, தி.மு.க., - நா.த.க.,வை தவிர்த்து, 'நோட்டா'வுக்கு ஓட்டுப்போட பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், அ.தி.மு.க.,வினர் தங்கள் கட்சியினர் வீடுகளுக்கும், நடுநிலையாளர்கள் வீடுகளுக்கும் சென்று, நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., நாம் தமிழர் கட்சி உட்பட, 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. அதனால், இந்த மூன்று கட்சிகளின் ஓட்டு யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வினர் யாருக்கு ஓட்டு போடுவது என்பது பற்றி பழனிசாமி தரப்பில் கருத்து தெரிவிக்காத நிலையில், தற்போதைய ஈரோடு இடைத்தேர்தலுக்கு பழனிசாமி தரப்பில், 'நோட்டா'வுக்கு ஓட்டுப்போடுமாறு தீவிர பிரசாரத்தில் ஈடுபடும்படி, கட்சியினரை வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை, அ.தி.மு.க., புறக்கணித்தது. தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதும், அ.தி.மு.க., ஓட்டு தங்களுக்கு கிடைத்ததாக மார்தட்டியது. இம்முறை அதற்கு இடம் தராமலும், தி.மு.க., ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பை புரிய வைக்கவும், பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில், சேலம் மாவட்டத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், 'நோட்டோ'வுக்கு ஓட்டுக்களிக்கச் செய்ய வேண்டும்; இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தலில் 'நோட்டா'விற்கு இவ்வளவு ஓட்டு விழுந்ததே இல்லை என்று கூறும் வகையில், மக்களை பதிவு செய்ய வைக்க வேண்டும் என்பதே உத்தரவுகளில் முக்கியமானது.
இதையடுத்தே, ஈரோடு தேர்தலில் அ.தி.மு.க.,வினர் யாருக்கு ஓட்டுப் போடுவர் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'அது ரகசியம்; தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாருங்கள். என்ன நடந்தது என்பது புரியும்' என்று சூசகமாக சொன்னார் பழனிசாமி.
இதைத்தொடர்ந்து, தொகுதிக்குள் களத்தில் போட்டியில் இருக்கும், தி.மு.க., நாம் தமிழர் கட்சித் தொண்டர்களை போல, அ.தி.மு.க.,வினரும் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அவர்கள், பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க, நோட்டாவுக்கு ஓட்டளிக்குமாறு பிரசாரம் செய்வதுடன், எதற்காக நோட்டாவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது குறித்த துண்டு பிரசுரத்தையும் வழங்குகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-