ADDED : ஆக 13, 2025 03:45 AM
சென்னை: பெண்களுக்கு எதிரான, 'ஈவ் டீசிங்' குற்றங்கள் தொடர்பாக, ஆண்டுக்கு 230க்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் சரிகாஷா. இவர், 1998ல், எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லுாரியில் படித்து வந்தார். கல்லுாரி முடிந்து தோழியருடன் நடந்து சென்ற போது, குடிபோதையில் ஆட்டோவில் வந்த கும்பல், சரிகாஷாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததால் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, பொது இடங்களில் பெண்கள் கேலி செய்யப்படுவதை தடுக்க, தமிழ்நாடு பெண்களை கேலி செய்தல் தடை சட்டம் இயற்றப்பட்டது. பின், இந்தச் சட்டத்திற்கு, தமிழ்நாடு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டம் என, மறுபெயரிடப்பட்டது.
சரிகாஷாவின் மரணத்திற்கு பின்னரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெண்களுக்கு எதிரான ஈவ் டீசிங் குற்றங்களில், 2022ஐ விட, 2023ல், 236 வழக்குகள் அதிகரித்து உள்ளன. அதேபோல, 2023ஐ காட்டிலும், 2024ல், 235 வழக்குகள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டிலும் இதுவரை, 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இப்படி ஆண்டுதோறும், பெண்களுக்கு எதிரான ஈவ் டீசிங் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு கூறினர்.