" 10 ஆடுகள் கூடினால்கூட தலைவனை தேர்ந்தெடுக்கும் " - இண்டியா கூட்டணியை கிண்டலடிக்கும் அண்ணாமலை
" 10 ஆடுகள் கூடினால்கூட தலைவனை தேர்ந்தெடுக்கும் " - இண்டியா கூட்டணியை கிண்டலடிக்கும் அண்ணாமலை
ADDED : ஏப் 15, 2024 12:04 PM

பல்லடம்: ''10 ஆடுகள் ஒன்றுக்கூடிவிட்டால் கூட தலைவனை தேர்ந்தெடுத்து அதன் பின்னால் செல்லும்; ஆனால் இண்டியா கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்றே தெரியாமல் அரசியல் செய்வதாக'' தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கிண்டலாக பேசினார்.
கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் அண்ணாமலை பல்லடம் பகுதியில் பிரசாரத்தில் பேசியதாவது: நான் வெற்றிப்பெற்றால் 500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். திராவிட கட்சிகள் பணப்பேய்களை போல பித்துப்பிடித்து இருக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவேண்டும்; பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் தேசம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என பிரதமர் மோடிக்கு தெரியும்.
தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது. அது இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து வருகிறது. திமுக தலைவர்களுக்கு எப்படி ஆட்சி செய்வது எனத் தெரியாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒருவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவர் தமிழக மக்கள் அனைவரும் நன்றாக இருப்பதாக கூறுகிறார்.
இண்டியா கூட்டணி
ஒரு 10 ஆடுகள் ஒன்றுக்கூடிவிட்டால் கூட தலைவனை தேர்ந்தெடுத்து அதன் பின்னால் செல்லும். ஆனால் இண்டியா கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் எனத் தெரியாமல் 6 மாதமாக அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் நமக்கு உலக தலைவர்களுள் ஒருவரான மோடி இருக்கிறார். அவர் நினைத்தால் போனில் பேசி போரை நிறுத்துவார். இவ்வாறு அவர் பேசினார்.

