டெங்கு காய்ச்சலில் ரத்த தட்டணுக்கள் குறைந்தாலும் சித்த மருத்துவத்தில் காப்பாற்றலாம்: டாக்டர் வீரபாபு
டெங்கு காய்ச்சலில் ரத்த தட்டணுக்கள் குறைந்தாலும் சித்த மருத்துவத்தில் காப்பாற்றலாம்: டாக்டர் வீரபாபு
ADDED : நவ 23, 2025 01:36 AM

சென்னை: ''டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ரத்த தட் டணுக்கள், 26,000 வரை குறைந்தாலும், சித்த மருத்துவ முறையில் காப்பாற்ற முடியும்,'' என, சித்தா டாக்டர் வீரபாபு தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கம் அடைகின்றன. அதனால், தமிழகம் முழுதும் பரவலாக டெங்கு பாதிப்பு காணப்படுகிறது.
இந்த ஆண்டில், இதுவரை 18,000க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக, 50க்கும் அதிகமானோர், டெங்குவால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவ்வாறு தொடர் சிகிச்சையில் இருக்கும் நபர்களுக்கு, ரத்த தட்டணுக்கள் குறைவதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. அலோபதி மருத்துவ முறையில், அவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் ஏற்றப்படுகின்றன.
ஆனாலும், சிகிச்சை பயன் தராமல் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், டெங்கு பாதித்து, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரையும், சித்த மருத்துவ முறையில் காப்பாற்ற முடியும் என, சித்தா டாக்டர் வீரபாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்த, 2012 மற்றும் 2017ம் ஆண்டுகளில், 131 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட போது, சித்த மருத்துவத்தில், நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவை, பலரின் உயிரை காப்பாற்றியது.
ஆண்டுதோறும் டெங்குவால், மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்தவர்களையும், காப்பாற்றி வருகிறோம்.
குறிப்பாக, சென்னையை சேர்ந்த சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டார். அவரது பெற்றோர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறுவனை அனுமதித்து, தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கும்போது, 90,000 எண்ணிக்கையில் இருந்த தட்டணுக்கள், படிப்படியாக குறைந்து, 26,000 எண்ணிக்கைக்கு வந்தது.
சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், அம்மருத்துவமனை, வேறு மருத்துவமனைக்கு, சிறுவனை அழைத்து செல்லும்படி பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. மற்ற மருத்துவமனைகளிலும் சிறுவனின் நிலை அறிந்து, சிகிச்சை தர முன்வரவில்லை. அதன்பின், மற்றவர்களின் உதவியோடு, மணப்பாக்கத்தில் உள்ள, டாக்டர் வீரபாபு சித்தா மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது, சிறுவனின் ரத்த தட்டணுக்கள் குறைந்திருந்ததுடன், கடுமையான காய்ச்சல் பாதிப்பும் இருந்தது. உடனடியாக கஷாயம், மூலிகை சாறு சிறுவனுக்கு வழங்கப்பட்டது. மறுநாள் சிறுவனின் காய்ச்சல் குறைந்தது.
தொடர் சிகிச்சையில், 30,000, 54,000 என ரத்த தட்டணுக்கள் உயர்ந்தன. பின், 2.16 லட்சமாக ரத்த தட்டணுக்கள், சித்த மருத்துவ முறையில், இயற்கையாகவே அதிகரித்தது.
தற்போது சிறுவன் நலமுடன் உள்ளார். இதுபோல், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, ரத்த தட்டணுக்கள் குறைந்திருந்தாலும், சித்த மருத்துவ முறையில் காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

