சாம்பலானாலும் தனித்தே போட்டி கூட்டணி தவறை செய்ய மாட்டேன்: சீமான்
சாம்பலானாலும் தனித்தே போட்டி கூட்டணி தவறை செய்ய மாட்டேன்: சீமான்
ADDED : ஆக 12, 2025 04:00 AM
சென்னை: “அரசியலில் ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, திருமாவளவன் செய்த தவறை, நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சீமான் அளித்த பேட்டி:
ஒரு மாநிலத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியவில்லை. தேர்தல் முடிந்த பின், 42 நாட்கள் வரை பெட்டியை பாதுகாக்கும்போது, எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த முறைகேட்டால் அனைத்து ஓட்டுகளும் பா.ஜ.,வுக்கு தான் போகின்றன.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால், விரும்பிய சின்னம் கிடைக்கும். ஒரு கட்சியின் பொறுப்பில் இருந்தவரை, நீதிபதியாக நியமிக்கின்றனர்.
இப்படி இருக்கையில், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரிதுறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., - என்.ஐ.ஏ., போன்றவை தன்னிச்சையான அமைப்பாக எப்படி இருக்க முடியும்?
வட மாநிலத்தவர் தமிழகத்துக்கு வரட்டும், சம்பாதிக்கட்டும். அதை யாரும் தவறு என சொல்லவில்லை. ஆனால், ஓட்டுரிமை கொடுப்பதை மட்டும் ஏற்க முடியாது.
ஆணவ கொலை செய்வது நோய் தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் தான், அதை சரிசெய்ய வேண்டும்.
மோடி, ராகுல், ஸ்டாலின், பழனிசாமி தலைமையில் தனித்தனி அணிகள் போல், மோடியை முன்னிறுத்தி அண்ணாமலையும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார்.
விஜய் வருகையால், நா.த.க., ஓட்டுகள் குறையும் என, தகவல்களை பரப்புகின்றனர். நான் பயந்து, கூட்டணிக்கு போய் விடுவேன் என்று எதிர்பார்க்கின்றனர். அரசியலில், ராமதாஸ், விஜய்காந்த், வைகோ, திருமாவளவன் செய்த தவறை, நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
வரும் 2026ல் சட்டசபை தேர்தலில், நா.த.க., தனித்துத்தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று, நா.த.க., சாம்பல் ஆனாலும் சரி, தனித்தே போட்டியிடுவேன். 1,000 கோடி ரூபாய் தருவதாக கூறி, கூட்டணிக்கு வாருங்கள் என பேரம் பேசினர்.
'சேர்ந்து நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த பின், போன் செய்தால் எடுப்பீர்களா' என கேட்டேன்; பதில் கூறாமல் போய் விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.