எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி ஒன்றானாலும் தி.மு.க.,வை மிஞ்ச முடியாது: ரகுபதி
எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி ஒன்றானாலும் தி.மு.க.,வை மிஞ்ச முடியாது: ரகுபதி
ADDED : பிப் 13, 2025 07:48 PM
சென்னை:''அனைத்து எதிர்க்கட்சிகளின் ஓட்டு வங்கி ஒன்று சேர்ந்தாலும், தி.மு.க., ஓட்டு வங்கியை மிஞ்ச முடியாது'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அவரது பேட்டி:
கருத்து கணிப்புகளை, நாங்கள் நம்புவது கிடையாது. எனினும், அதற்கும் ஒரு வலிமை உண்டு. 'இன்று லோக்சபா தேர்தல் நடந்தால், தி.மு.க., கூட்டணி, 39 தொகுதிகளில் வெற்றி பெறும்' என, 'இந்தியா டுடே' பத்திரிகையுடன், 'சி வோட்டர்ஸ்' இணைந்து நடத்திய, கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், 47 சதவீதம் ஓட்டுகளை வாங்கிய, தி.மு.க., கூட்டணி, 52 சதவீதம் ஓட்டுகளைப் பெறும். அ.தி.மு.க., ஓட்டு சதவீதம், 23ல் இருந்து 20 ஆக குறையும். தே.ஜ., கூட்டணி 21 சதவீதம் ஓட்டுகளைப் பெறும் என, கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களை பொருத்தவரை, 52 சதவீதம் என்பதை இன்னும் உயர்த்த, முதல்வர், துணை முதல்வர் பணிகளை மேற்கொள்வர். 'அ.தி.மு.க.,வில் பழனிசாமி, வேலுமணி, தங்கமணி என யாராக இருந்தாலும், எனக்கு ஜூனியர் தான்' என, செங்கோட்டையன், தன் நண்பர்களுடன் பேசிய தகவல் வந்திருக்கிறது. இதிலிருந்து அவர் எந்த அளவிற்கு ஆதங்கத்தில் இருக்கிறார் என்பதையும், அங்கு இருக்கும் சீனியர்கள் எந்தளவிற்கு ஆதங்கத்தில் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.
கண்ணுக்கு தெரிந்த வரை எதிரிகளே இல்லை என, ஜெயலலிதா கூறினார். நாங்கள் எதிரிகள் இல்லை என, சொல்லவில்லை. எதிரிகள் இருக்கின்றனர். அவர்களுடைய ஓட்டு வங்கி குறைந்தது விட்டது என, சொல்கிறோம். அனைத்து எதிர்க்கட்சிகளின் ஓட்டு வங்கி ஒன்று சேர்ந்தாலும், எங்கள் ஓட்டு வங்கியை மிஞ்ச முடியாது. அதற்கு ஏற்றாற் போல், மக்கள் விரும்பும் ஆட்சியை, முதல்வர் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

