ADDED : பிப் 15, 2024 07:03 AM

சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 8,894 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. மே முதல் செப்., வரை காற்றாலை சீசன்.
சீசன் காலத்தில், காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 10 கோடி யூனிட்ளை தாண்டியும், சீசன் இல்லாத நாட்களில், 1 கோடி யூனிட்டிற்கு குறைவாகவும் மின்சாரம் கிடைக்கும். அந்த மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.
தற்போது, மத்திய அரசின் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிக்காகவும், வல்லுார் அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாகவும், 2,000 மெகா வாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 10 கோடி யூனிட்டிற்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, 9 கோடி யூனிட் வரை தான் கிடைக்கிறது.
இந்நிலையில், சீசன் இல்லாத போதும் சில தினங்களாக காற்றாலைகளில் இருந்து, தினமும் 2 கோடி யூனிட் மேல் மின்சாரம் கிடைக்கிறது. வெயிலால் தினசரி மின் நுகர்வு, 36 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ள நிலையில், அதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்கு காற்றாலை மின்சாரம் கைகொடுக்கிறது.

