ஸ்டாலின் பேரன்கூட நம்ப மாட்டார்: ரகுபதியை கலாய்க்கும் செல்லுார் ராஜு
ஸ்டாலின் பேரன்கூட நம்ப மாட்டார்: ரகுபதியை கலாய்க்கும் செல்லுார் ராஜு
UPDATED : மே 16, 2025 06:23 AM
ADDED : மே 16, 2025 06:22 AM

சென்னை: 'அரசியல் வாழ்வளித்த அ.தி.மு.க., தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்பவர் தான் அமைச்சர் ரகுபதி' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், கடந்த நான்காண்டுகளாக, 'இம்சை அரசன் புலிகேசி தர்பார்' நடத்தி வரும், நவீன கோமாளி மன்னன் ஸ்டாலினின் ஆஸ்தான கொத்தடிமை அமைச்சர் ரகுபதி.
இத்தனை ஆண்டு கள் தி.மு.க.,வுக்கு முட்டுக் கொடுத்ததற்கு பரிசாக, இப்போது கனிமவளத் துறை கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கைகாட்டவில்லை என்றால், ரகுபதி எங்கு இருந்திருப்பார் என்பதே தெரியாது. இவருக்கு அரசியல் வாழ்வளித்த அ.தி.மு.க., தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்பவர் தான் ரகுபதி.
தமிழகத்தில் சட்டம்- - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு பாதாளத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கம் அமோகமாக உள்ளது. 'கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு ஊட்டி போட்டோ ஷூட் கேட்கிறதா?' என்று, முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்லுங்கள் ரகுபதி.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என அந்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றியவர், அன்றைய முதல்வர் பழனிசாமி. 'அண்ணா பல்கலை பாலியல் வழக்கில், ஞானசேகரனுக்கும் தி.மு.க.,வுக்கும் சம்பந்தமே இல்லை' என, பச்சைப்பொய் பேசியவர் ரகுபதி.
நான்கு ஆண்டுகளாக, கோடநாடு வழக்கை விசாரித்து முடிக்காமல் இருப்பது, தி.மு.க., அரசுதான்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதும், தமிழகத்திற்கான நிதி வந்து விட்டது என்ற கடுப்பு இருக்கத்தானே செய்யும்? தி.மு.க., நடத்திய போராட்ட நாடகத்தை நம்பி, மத்திய அரசு நிதி கொடுத்தது என, ரகுபதி சொல்வாரானால், அதை ஸ்டாலின் பேரன்கூட நம்ப மாட்டார்.
ரெய்டுக்கு பயந்து, தி.மு.க.,வை காங்கிரசிடம் அடமானம் வைத்த கருணாநிதி குடும்பத்தின் கொத்தடிமைகள், மாநில உரிமைகள் பற்றி பாடமெடுக்க துளியும் தகுதியற்றவர்கள்.
எவ்வளவு 'மேக்கப்' போட்டாலும், எத்தனை 'போட்டோ ஷூட்' நடத்தினாலும், ஸ்டாலினால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. 2026க்குப் பின், சட்டையைக் கிழித்துக் கொண்டு ஸ்டாலினும், தி.மு.க.,வும் வருவது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அப்படி பேசியிருக்க கூடாது
ராணுவ வீரர்கள் மீது ஒட்டுமொத்த நாடும் மரியாதை செலுத்துகிறது. அந்த வகையில், செல்லுார் ராஜு பேசியது தவறு தான்; அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க.,வில் இடமில்லை. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மேலும் பல கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இணையும்.
-நத்தம் விசுவநாதன்,
முன்னாள் அமைச்சர்