'சபாநாயகர் கூட எழுதி வைத்துதான் படிக்கிறார்' அமைச்சருக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பதில்
'சபாநாயகர் கூட எழுதி வைத்துதான் படிக்கிறார்' அமைச்சருக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பதில்
ADDED : ஏப் 09, 2025 02:32 AM

சென்னை:''சபாநாயகர் அப்பாவு கூட எழுதி வைத்து தான் படிக்கிறார்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா தெரிவித்தார்.
சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா, கூட்டுறவு தொடர்பாக, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவர் கூறிய குற்றச்சாட்டுகள், சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:
அமைச்சர் பெரியகருப்பன்: உறுப்பினர் இசக்கி சுப்பையா எழுதிக் கொண்டு வந்ததை எல்லாம் படித்தால் நன்றாக இருக்காது.
இசக்கி சுப்பையா: தொகுதி மக்களிடம் இருந்து, எனக்கு வந்த தகவல்களை தான் பேசுகிறேன். இல்லை என்றால் மறுக்கட்டும்.
அதற்காக நான் எழுதி வைத்து படிப்பதாக, அமைச்சர் கூறுவது சரியல்ல. சபாநாயகர் கூட காலையில் வந்தவுடன், திருக்குறளை பார்த்து தான் படிக்கிறார்.
அதனால், அவருக்கு தெரியாது என்று அர்த்தம் இல்லை. எங்களுக்கு தெரியும். தகவல்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக பார்த்து படிக்கிறோம். அமைச்சர்கள் கூட பார்த்து தான் படிக்கின்றனர் என்று நினைக்கிறேன்.
சபாநாயகர் அப்பாவு: புள்ளி விபரங்கள் இருந்தால், பார்த்து தான் பேசுவர். அதில் தவறில்லை.
அமைச்சர் துரைமுருகன்: சட்டசபையில் யாரும் படிக்கக்கூடாது என்பதுதான் விதி. நான் எம்.எல்.ஏ.,வான புதிதில், அன்றைய குடியாத்தம் எம்.எல்.ஏ., துரைசாமி குறிப்புகளை வைத்து பேசிக் கொண்டிருந்தார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, சபையை நடத்திக் கொண்டிருந்த ஜோதியம்மாள், அதை அனுமதிக்கவில்லை.
பார்த்து பேசக்கூடாது என்றார். அப்படி கண்டிப்பு இருந்த காலம் அது. இந்தச் சூழல் மாறி, இப்போது படிப்பதை தவிர, யாரும் பேசுவதில்லை.
சபாநாயகர் அப்பாவு: சபாநாயகராக பழனிவேல்ராஜன் இருந்த போது, எழுதி வைத்ததை பார்த்து பேச, யாரையும் அனுமதிக்க மாட்டார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.