ADDED : பிப் 08, 2025 06:51 PM
சென்னை:'இடைத்தேர்தலில், தி.மு.க., கோடிகளை செலவிட்டும், நா.த.க.,வின் ஓட்டு சரியவில்லை' என, நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி, இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும், கடந்த முறை 10,827 ஓட்டுக்களை நா.த.க., பெற்றிருந்தது. தற்போது கூடுதல் ஓட்டுகள் பெற்று இருப்பதுடன், 20,000 ஓட்டுகளை தாண்டியுள்ளார். இது, ஈ.வெ.ரா., குறித்து, சீமான் பேசியதற்கு கிடைத்த வெற்றி என, நா.த.க.,வினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., கோடிகளை செலவிட்டும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், எதிர்க்கட்சி வட்ட செயலர்களை விலைக்கு வாங்கியும், கள்ள ஓட்டுப் போடுவோரை களம் இறக்கியும், நா.த.க., ஓட்டுகளை சரிக்க முடியவில்லை. கடந்த முறை வாங்கிய ஓட்டுகளை தாண்டி முன்னேறி உள்ளோம். சீமான் உண்மையை உரக்க பேசினார். ஈ.வெ.ரா.,வின் ஆபாசங்களை பேசினார். இது, சீமானுக்கு கிடைத்த வெற்றி. ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை மக்களும் வெறுத்துள்ளனர் என்பது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாயிலாக வெளிப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

