ஈ.வெ.ரா., பேசியதையெல்லாம் பொது வெளியில் பேச முடியாது கோவையில் அண்ணாமலை பேட்டி
ஈ.வெ.ரா., பேசியதையெல்லாம் பொது வெளியில் பேச முடியாது கோவையில் அண்ணாமலை பேட்டி
UPDATED : ஜன 09, 2025 07:30 PM
ADDED : ஜன 09, 2025 07:22 PM
கோவை:''ஈ.வெ.ரா., பேசியதை சீமான் சொன்னது சரி தான் என சொல்லவில்லை. நான் அந்த கருத்தை பொது வெளியில் பேச வேண்டியது இல்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், உச்ச நீதிமன்றம் அமைத்த புலனாய்வு குழு, தமிழக போலீஸ் அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளது. ஆனால், மாநில அரசு, அதிகாரியான அந்த இன்ஸ்பெக்டர் எந்த தவறும் செய்யவில்லை; அவர் மீது நடவடிக்கை இல்லை என, தெரிவித்துள்ளது.
மாநில அரசு எவ்வாறு பொய்யாக இருக்க முடியும்? இந்த விஷயத்தில் சென்னை போலீஸ் கமிஷனர், சட்டத்துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்டோரும் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர். தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு பொறுமையாக உள்ளனர்.
டங்ஸ்டன் பிரச்னையை மாநிலத்தின் முடிவுக்கே மத்திய அரசு விட்டுள்ளது. மதுரைக்கு அருகில் இருக்கும் நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்களை அழைத்து அமைச்சர்கள் பேசியிருந்தால் பிரச்னை முடிந்திருக்கும். இவ்வளவு பெரிய விவசாயிகளின் பேரணி, கொந்தளிப்பு நடந்திருக்காது. டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்திற்கு வரப்போவது கிடையாது. அதற்கு முற்றுப்புள்ளி இட்டாயிற்று. அதன்பின்பும், தமிழக அரசு இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
சென்னை புத்தக திருவிழாவில் சீமான், ஈ.வெ.ரா.,வை வைத்து சில கருத்துக்களை பேசியிருக்கிறார். ஈ.வெ.ரா., சீமான் சொல்வதைப் போன்று பேசவில்லை என சிலர் மறுக்கின்றனர். அப்படித்தான் பேசியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை, சீமானுக்கு ஆதரவாக நான் கொடுக்கிறேன். ஆனால் அதை பொது வெளியில் பேச வேண்டிய அவசியம் இல்லை; இதையெல்லாம் பெண்களும் குழந்தைகளும் கூட பார்க்கின்றனர்.
ஈ.வெ.ரா., பேசியதை சொன்னால், மக்களிடையே அருவெறுப்பு வந்து விடும். சீமான் சொன்னது சரி தான் என சொல்லவில்லை. நான் அந்த கருத்தை பொது வெளியில் பேச விரும்பவில்லை. காலம் கடந்து விட்டது; அரசியல் மாறி விட்டது. மக்கள் புதிய பார்வையில் பார்க்கின்றனர். ஈ.வெ.ரா., ஒரு காலத்தில் பேசியதையெல்லாம் பொது வெளியில் எடுத்தால் மிகவும் தவறாகி விடும்.
யு.ஜி.சி., பிரச்னையை, முதல்வர் ஸ்டாலின், கல்வி செயலரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு, முதலில் வரைவுகளை அனுப்பி வைத்துள்ளது. பிப்., 5 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது. கல்லுாரியில் பணியில் சேர்ந்த பின், 'பதவி உயர்வுக்கு நெட் தேர்வை பயன்படுத்த வேண்டாம்' என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தோம்; அதை ஏற்றுக் கொண்டது.
பல்கலையின் துணைவேந்தர், அந்த பல்கலையில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கலாம். கல்வி துறையில் தொடர்பு இருந்தால் நியமனம் செய்யலாம் என, தெரிவித்துள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்ய, யு.ஜி.சி., செனட், கவர்னர் நியமன உறுப்பினர்கள் குழு செய்யலாம்.
இதை எதற்காக அரசியல் செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? முதல்வருக்கு பிரச்னை இருந்தால், காரணத்துடன் எதிர்க்கட்டும். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'நடிகர் வடிவேலு இடத்தை பிடித்த செல்வப்பெருந்தகை!'
தமிழக
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'மனுநீதி சோழன் ஆட்சி தமிழ்நாட்டில்
நடக்கிறது' என்று கூறியதை கேட்டு, நான் சிரித்து விட்டேன். காமெடி நடிகர்
வடிவேலுவின் இடத்தை, செல்வப்பெருந்தகை எடுத்துக் கொண்டார்.
அது
மட்டுமின்றி, தி.முக.,வின் கூட்டணி கட்சிகளும் வடிவேலுவின் சினிமா இடத்தை
எடுத்துக் கொண்டன. கூட்டணி கட்சிகள் எப்படியெல்லாம் முதல்வர் ஸ்டாலினை
புகழலாம் என்பதைதான் செய்து கொண்டிருக்கின்றன.
சட்டசபையில்
நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம்
பார்ப்பது போலவே உள்ளது. அந்த படத்தில் மன்னரை சுற்றி இருந்து கொண்டு, அவர்
புகழ் பாடுவது போல உள்ளது.
தி.மு.க., கூட்டணி கட்சியினர்,
உண்மையில் வீதிக்கு வருகிறார்களா, மக்களை பார்க்கிறார்களா, மக்கள் இந்த
ஆட்சி குறித்து என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதையெல்லாம் கேட்கிறார்களா
என, எதுவுமே தெரியவில்லை.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.

