குடும்ப நல சேவை மையம் வேண்டும் முன்னாள் துணை ராணுவத்தினர் கோரிக்கை
குடும்ப நல சேவை மையம் வேண்டும் முன்னாள் துணை ராணுவத்தினர் கோரிக்கை
ADDED : ஜன 05, 2025 12:24 AM

சென்னை:'குடும்ப நல சேவை மையம், 'கேன்டீன்' வசதி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு முன்னாள் துணை ராணுவப் படை கூட்டமைப்பு வலியுறுத்திஉள்ளது.
இதுகுறித்து, கூட்டமைப்பின் மாநில தலைவர் சீனிவாசன் கூறியதாவது:
எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லை காவல் படை மற்றும் சாஸ்த்ரா சீமா பால் உள்ளிட்ட படைப்பிரிவுகள், துணை ராணுவப் படைப்பிரிவுகளாக உள்ளன.
இந்த பிரிவுகள் அனைத்தும், மத்திய உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ராணுவ வீரர்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் மட்டும், 1.5 லட்சம் ஓய்வு பெற்ற துணை ராணுவப் படை வீரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கென குடும்ப நல வாரியம் கிடையாது; அதை அமைக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தி வருகிறோம். மேலும், தமிழக அரசின், 'டெக்ஸ்கோ' நிறுவனத்தில், முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதில், எங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஓய்வுபெற்ற துணை ராணுவப் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் அரசு தேர்வுகள் உள்ளிட்டவற்றிலும் சலுகைகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
துணை ராணுவப் படை வீரர்களுக்கான, 'கேன்டீன்' அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். ராணுவத்திற்கு உள்ளது போல குடும்ப நல சேவை மையங்கள் வேண்டும்.
இதுபோன்று பல கோரிக்கைகளை மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

