செந்தில்பாலாஜி அமைச்சராக அனுமதிக்காதீர் முன்னாள் ராணுவ வீரர் கவர்னருக்கு மனு
செந்தில்பாலாஜி அமைச்சராக அனுமதிக்காதீர் முன்னாள் ராணுவ வீரர் கவர்னருக்கு மனு
ADDED : செப் 28, 2024 02:50 AM
சென்னை:'ஊழல் வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளி வந்துள்ள, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை, மீண்டும் அமைச்சராக நியமிக்கக் கூடாது' என, இந்திய முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ வீரர்கள் நல கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சுரேஷ்பாபு, கவர்னருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி, ஜாமினில் வெளி வந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை, மீண்டும் அமைச்சராக நியமிக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக, செய்திகள் வந்துள்ளன.
நம் நாட்டில் அரசியல் அமைப்புதான் மிகவும் உயர்ந்தது. அதை பாதுகாப்பது, அரசியலமைப்பு செயல்பாட்டாளர்களின் கடமை. நல்லாட்சி, நல்ல மனிதர்களின் கையில் மட்டுமே உள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டால், அது வழக்கின் நடைமுறைக்கு இடையூறாக இருக்கும். நீதியின் போக்கை சீர்குலைக்கும். ஊழல் வழக்கில் கைதான செந்தில் பாலாஜிக்கு, பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு மதிப்பளித்து தகுதியான நபரை மட்டுமே அமைச்சராக நியமிக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வரை, அமைச்சராக நியமிக்கக் கூடாது. கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒருவரை, அமைச்சராக நியமித்தால், அது அரசியல் சாசனத்தின் மதிப்பை பாதிக்கும்.
ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்ற முறையில், தகுதியான நபரை அமைச்சராக நியமித்து, அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமிக்கும்படி, முதல்வர் பரிந்துரைத்தால், அதை ஏற்று அவரை அமைச்சராக நியமிக்க வேண்டாம். அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றும் விதமாக, அந்த பரிந்துரையை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.