ஆக்கிரமிப்பில் 'ஜவான் பவன்'கள் முன்னாள் ராணுவத்தினர் ஆதங்கம்
ஆக்கிரமிப்பில் 'ஜவான் பவன்'கள் முன்னாள் ராணுவத்தினர் ஆதங்கம்
ADDED : டிச 08, 2024 07:47 AM
திருப்பூர் : 'முன்னாள் ராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 'ஜவான் பவன்' எனப்படும் தங்கும் விடுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் படை வீரர் சுகாதார பங்களிப்பு திட்டத்தின் கீழ், நல வாரியம் மூலம், கோவை, ஈரோடு, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவமனைகள் உள்ளன.
ஓய்வு பெற்ற முப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் இங்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவமனை பகுதியில், தொலைதுாரங்களில் இருந்து வரும் முன்னாள் படை வீரர்களின் நலன் கருதி, 'ஜவான் பவன்' எனப்படும் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. மிகக்குறைந்த வாடகையில் இதை பயன்படுத்திக் கொள்ளும் வசதி உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பு தலைவர் முரளிதரன் கூறியதாவது:
கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 'ஜவான் பவான்'கள் வெளியாட்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. வாடகை, குத்தகை அடிப்படையில் விடப்படும் அக்கட்டடத்தில் உள்ள கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள், நாளடைவில் ஆக்கிரமிக்கப்பட்டு விடுகின்றன.
முன்னாள் ராணுவத்தினருக்கு பயனளிப்பதாக இல்லை. ஜவான் பவன்களை, முன்னாள் ராணுவத்தினர் அவர்களது குடும்பத்தினரின் பயன்பாட்டுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.