பி.ஏ.பி., அணைகளில் உபரிநீர் வெளியேற்றம்; ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பி.ஏ.பி., அணைகளில் உபரிநீர் வெளியேற்றம்; ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
UPDATED : ஜூலை 26, 2025 05:15 AM
ADDED : ஜூலை 25, 2025 08:57 PM

பி.ஏ.பி., திட்டத்திலுள்ள சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பியதால், மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் கனமழையால், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன (பி.ஏ.பி.-,) திட்டத்தில், வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு அணையில், ஜூன் 26ம் தேதி 160 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அணை நிரம்பியதால், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த அணைக்கு, மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 2,393 கனஅடி வீதமும், கீழ்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 264 கனஅடி தண்ணீர் வீதம் டனல் வழியாகவும் நீர்வரத்து உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.20 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வினாடிக்கு, 4,517 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு, 3,827 கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு, 2,427 கனஅடி வீதம் ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
பொள்ளாச்சி, டாப்சிலிப் அடுத்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி உயரம் கொண்டது. மொத்தம், 17 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்கலாம். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை மற்றும் சோலையாறு நீர் வரத்தால், பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த, 23ம் தேதி காலை நிலவரப்படி, 72 அடிக்கு, 70.12 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் பரம்பிக்குளம் அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 71.08 அடியாக உயர்ந்தது. அணைக்கு, வினாடிக்கு, 1,957 கனஅடி நீர் வரத்து இருந்தது. இதனால், நேற்று மதியம், ஒரு ஷட்டர் வழியாக வினாடிக்கு, 400 கனஅடி நீர் திறக்கப்பட்டது.நீர் வரத்துக்கு ஏற்ப, உபரிநீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் நேற்றுமுன்தினம், மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.தொடர்ந்து நேற்று, 120 அடியில், 118.75 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. வினாடிக்கு, 1,686 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. அணையில் இருந்து, ஆறு வழியாக வினாடிக்கு, 170 கனஅடி நீர், ஏழு ஷட்டர்கள் வழியாக, 1,439 கனஅடி நீர், பொள்ளாச்சி கால்வாய் வழியாக, 61 கனஅடி என, மொத்தம், 1,670 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பி.ஏ.பி., திட்டத்திலுள்ள அனைத்து அணைகளின் முழு கொள்ளளவும் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை உடுமலை அருகே, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, அணையிலிருந்து மதகு வழியாக, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வினாடிக்கு, 3,450 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இரவு முழுவதும் நீர் திறப்பு படிப்படியாக அதிகரித்தது. இதனால், அமராவதி ஆற்றின் வழியோரத்திலுள்ள, திருப்பூர், கரூர் இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 88.03 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,868.80 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,397 கனஅடி நீர்வரத்து இருந்தது. ஆற்றில், 971 கனஅடி நீர், பிரதான கால்வாயில், 325 கனஅடி நீர், கல்லாபுரம், ராமகுளம் கால்வாயில், 50 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
மழையளவு நிலவரம்! நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
சோலையாறு - 59, பரம்பிக்குளம் - 23, ஆழியாறு - 12, வால்பாறை - 41, மேல்நீராறு - 85, கீழ்நீராறு - 75, காடம்பாறை - 28, மேல்ஆழியாறு - 4, சர்க்கார்பதி - 13, வேட்டைக்காரன்புதுார் - 3, மணக்கடவு - 27, துாணக்கடவு - 31, பெருவாரிப்பள்ளம் - 35, நவமலை - 6, பொள்ளாச்சி - 20 என்ற அளவில் மழை பெய்தது.
- நிருபர் குழு -