நீதிமன்றங்களால் நியமிக்கப்படும் நிர்வாகிகள் சங்க பணியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
நீதிமன்றங்களால் நியமிக்கப்படும் நிர்வாகிகள் சங்க பணியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
ADDED : அக் 10, 2025 12:11 AM
சென்னை:'சங்கங்களை நிர்வகிக்க, நீதிமன்றங்களால் இடைக்காலமாக நியமிக்கப்படும் நிர்வாகிகள், நீண்ட காலத்துக்கு பணியில் நீடிப்பது, சங்கத்தின் ஜனநாயக உரிமை களை பாதிக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை என்ற இடத்தில் இயங்கி வந்த, அகில திருவிதாங்கூர் சித்த வைத்திய சங்கத்துக்கு, தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, சங்கத்தையும், சங்கம் நடத்தி வரும் சித்த மருத்துவ கல்லுாரியையும் நிர்வகிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ராமமூர்த்தியை, இடைக்கால நிர்வாகியாக நியமித்து, 2006ம் ஆண்டு உத்தரவிட்டது.
நிர்வாகிகள் தேர்வு கடந்த, 19 ஆண்டுகளாக சங்கத்தையும், கல்லுாரியை யும் நீதிபதி ஏ.ராமமூர்த்தி நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால், சங்க நிர்வாகத்தை ஒப்படைக்க கோரி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நோயல்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது சபீக் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
எந்த வழக்கின் அடிப்படையில், இடைக்கால நிர்வாகி நியமிக்கப்பட்டாரோ, அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டு உள்ளதாலும், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாலும், இடைக்கால நிர்வாகியான நீதிபதி ஏ.ராமமூர்த்தி, இரண்டு வாரங்களில் சங்கம் மற்றும் கல்லுாரியின் நிர்வாகத்தை, புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
உரிமை பாதிக்கும் சங்கங்களில் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அவற்றை ஜனநாயக பாதைக்கு திரும்பச் செய்வதற்கான இடைக்கால நடவடிக்கையாக மட்டுமே, இடைக்கால நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
அவர்கள் குறுகிய காலத்துக்குள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மாறாக, இடைக்கால நிர்வாகிகள் நீண்ட காலமாக சங்கங்களை நிர்வகிப்பதன் வாயிலாக, சங்க உறுப்பினர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.