வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று பெற விலக்கு: அரசாணைக்கு ஐகோர்ட் தடை
வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று பெற விலக்கு: அரசாணைக்கு ஐகோர்ட் தடை
UPDATED : ஜன 23, 2026 10:17 PM
ADDED : ஜன 23, 2026 01:07 PM

நமது நிருபர்
வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என விலக்களித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு, ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்தது.
கடந்த டிசம்பர் 23ல், கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'கடந்த 2019 முதல், 2024 வரை செயல்பட்டு இருக்கக்கூடிய தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிமுறைகள், 2019ன்படி உள்ள மதம் சார்ந்த கட்டடங்களுக்கு, கலெக்டரின் தடையில்லா சான்றை வலியுறுத்தாமல், திட்ட அனுமதி வழங்கப்படும்.
'இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி, விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டடங்களுக்கு இது பொருந்தும்' என பேசினார்.
தொடர்ந்து, கடந்த ஜன., 8ல் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. 'இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். மேலும், இது போன்ற அறிவிப்பால் தெருக்கள்தோறும் ஜெபக் கூடங்கள், தொழுகை இடங்கள் ஏற்படுத்தி, மத மாற்றம் செய்யும் வேலைகள் நடக்க, அரசே வழிவகுத்து கொடுக்கிறது' என, ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டின.
இந்த நிலையில், வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என விலக்களித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

