ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடன் ரிசர்வ் வங்கி விதிமுறைகளில் விலக்கு? மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை
ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடன் ரிசர்வ் வங்கி விதிமுறைகளில் விலக்கு? மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை
ADDED : மே 31, 2025 04:48 AM
புதுடில்லி: தங்க நகைக்கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு விலக்கு அளிக்கலாம் என, மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தனிநபர்களுக்கு தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக, ஒன்பது புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய வரைவு அறிக்கையை சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இந்த கட்டுப்பாடுகளில் உள்ள சில அம்சங்கள் சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, தி.மு.க., உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
குறிப்பாக, அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில், 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது, நகையின் மதிப்பில், 90 சதவீதம் வரை கடனாக வழங்கப்படுகிறது.
எனவே, கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய, ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தும்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இல்லையெனில், விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கட்டுப்பாடுகள் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விரிவான வரைவு அறிக்கையை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில், சிறிய அளவில் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
அதாவது, புதிய கட்டுப்பாடுகளில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வரை சிறிய நகைக்கடன் வாங்குவோருக்கு விலக்கு அளிக்க பரிந்துரை செய்துள்ளது.
இது ஏற்கப்பட்டால், 2 லட்சம் ரூபாய் வரை வாங்கப்படும் சிறிய நகைக்கடனுக்கு, நகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும்.
நிதி அமைச்சகத்தின் பரிந்துரையை அமல்படுத்த நேரம் எடுக்கும் என்பதால், 2026 ஜன., 1 முதல் அமலாகலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'பழைய நடைமுறை தொடரணும்'
முதல்வர் ஸ்டாலின்: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி, மத்திய நிதி அமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கையாக இருந்தாலும், மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தங்க நகைக்கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை முறைப்படுத்த, மத்திய அரசின் நிதி சேவைகள் துறை பரிந்துரை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. பரிந்துரையில், 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் கடன் பெறுவோருக்கு, கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு தரும்படி கூறப்பட்டுள்ளது. அனைத்து நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும். பழைய நடைமுறையே தொடர வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: நகைக்கடன் பலருக்கு உயிர் நாடியாக உள்ள தமிழகத்தில், சரியான நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கான கொள்கை வகுத்த நிதி அமைச்சருக்கு, தமிழக பா.ஜ., சார்பில் நன்றி.