16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சி உருவாக்கம்
16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சி உருவாக்கம்
ADDED : ஜன 01, 2025 10:31 PM
சென்னை:தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன.
தமிழகத்தின் மக்கள் தொகையில், 48.45 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிவேக நகரமயமாக்கலைக் கருதி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
கட்டமைப்பு மேம்பாடு
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி, பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுற்றுலா தலங்கள் அதிகரித்துள்ளன.
அங்கு குடிநீர், கழிப்பறை, சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாக உள்ளது.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன், கிராமப் பகுதிகள் இணைக்கப்படும்போது, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சிகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம், வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இணைப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக் குழு, மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விரிவாக்கம் மற்றும் உருவாக்கம் செய்வதற்கான உத்தேச பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.
மறு நிர்ணயம்
திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன், 147 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இணைக்கப்படுகின்றன.
அதேபோல், பேரூராட்சிகளுடன் இணைத்தும், தனித்தும் என, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.
கிராம ஊராட்சிகளை இணைத்தும் மற்றும் தனியாகவும் என, ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட, 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன.
அதேபோல், திருப்பூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து, 25 பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
இந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் விரிவாக்கம் மற்றும் உருவாக்கம் தொடர்பான அரசாணையை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
இதற்கான வார்டு எண்ணிக்கை மறு நிர்ணயம் செய்யப்பட்டு, வார்டு எல்லைகள் வரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.