தனியாரிடம் மின் கொள்முதல் அனுமதி வழங்க எதிர்பார்ப்பு
தனியாரிடம் மின் கொள்முதல் அனுமதி வழங்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 23, 2025 12:23 AM

தமிழகத்தில், 50 கிலோ வாட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் மின் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், 'கிரீன் எனர்ஜி' எனப்படும், சோலார் மற்றும் காற்றாலை வாயிலாக தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்கின்றன.
இவற்றிடம் இருந்து தமிழக அரசு, மின் யூனிட்களை குறிப்பிட்ட தொகைக்கு பெற்று, தொழிற்சாலைகளுக்கு கூடுதல் கட்டணத்தில் வழங்குகிறது. 100 கிலோ வாட்டுக்கு மேல் மின்சாரம் தேவைப்படும் பெரிய நிறுவனங்கள், தனியாரிடம் இருந்து நேரடியாக மின்சாரம் வாங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சிறு தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், 50 கிலோ வாட்டுக்கு மேல் மின்சாரம் தேவைப்படும் நிறுவனங்கள் தனியாரிடம் நேரடியாக வாங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்கிறார், மதுரை கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 90,000 சிறுதொழில் நிறுவனங்கள், 50 கிலோ வாட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துகின்றன.
அரசிடம் யூனிட் ஒன்றுக்கு, 8.45 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்துகிறோம். இதுவே தனியார் நிறுவனங்களின் சோலார், காற்றாலை மின்சாரத்தை நேரடியாக நாங்கள் வாங்கினால், யூனிட் 2.50 முதல் 3 ரூபாய்க்கு கிடைக்கும்.
அதற்கான உள்கட்டமைப்புக்காக, மின்வாரியத்திற்கு யூனிட்டுக்கு 2 ரூபாய் வீதம் செலுத்தினால் அதற்கு லாபம் தான். எங்களுக்கும் செலவு குறைவாகும்.
மின்கட்டண உயர்வால் கடந்தாண்டு, 4,500 சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலை தொடரக்கூடாது எனில், தமிழக அரசு, 50 கிலோ வாட்டுக்கு மேல் மின் உற்பத்தி பெறும் சிறுதொழில் நிறுவனங்களை, தனியார் நிறுவனங்களிடம் நேரடியாக மின் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
வீடுகளில் சோலார் முறையில் மின்சாரம் தயாரிப்பதற்கு அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், தொழிற்சாலைகள் சோலார் மின் உற்பத்தி செய்வதற்கு மானியம் தருவதில்லை.
வீடுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை தொழிற்சாலைகளுக்கும் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .