ADDED : பிப் 26, 2024 10:49 PM
கூடலுார் : தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட கர்நாடக முன்னாள் தலைமை வனவிலங்கு வார்டன் அஜய் மிஸ்ரா, மேற்கு வங்க வனத்துறை முன்னாள் தலைவர் சுப்ரத் முகர்ஜி ஆகியோர் தலைமையிலான குழுவினர் தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் ஐந்து நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சரணாலயப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி, முல்லைக்கொடி, பச்சைக் காடு, மேதகாணம், கெவி, பருந்தும்பாறை, நெல்லிக்காம்பட்டி, மங்கலதேவி, உப்புபாறை, அருவிப்பாலம், பச்சக் காணம்ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர். புலிகளின் வாழ்விடங்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாற்றத்தால் சிக்கல், வேட்டையாடுவதில் இருந்து புலிகளை பாதுகாப்பதில் ஏதேனும் பிரச்னை, தற்போதுள்ள புலிகளின் ஆரோக்கியம், அவற்றை பாதுகாக்கும் வனத்துறையினருக்கு தேவையான வசதிகள் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் கேரள வனத்துறையுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி இதற்கான ஆய்வு அறிக்கையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இக்குழு அனுப்பி வைக்க உள்ளது.
