ADDED : அக் 08, 2024 10:32 PM
சென்னை:பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை பதவி உயர்வு வாயிலாகவும், 2 சதவீத இடங்களை தகுதி உடைய அமைச்சு பணியாளர்களின் பதவி உயர்வு வாயிலாகவும் நிரப்ப வேண்டும். இதற்கான அரசாணை, 2007ல் பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையின்படி, தங்களுக்கு 2 சதவீத ஒதுக்கீடு வழங்கவில்லை என, உயர் நீதிமன்றத்தில், அமைச்சு பணியாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ள தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், '2014 முதல் 2025ம் ஆண்டு வரைக்கும், அமைச்சு பணியாளர்களுக்கான 2 சதவீத ஒதுக்கீட்டின்படி, 130 பணியிடங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், இறுதி உத்தரவு வரும் வரை காத்திருப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அமைச்சு பணியாளர்களுக்கான, 2 சதவீத ஒதுக்கீட்டில் மனுதாரர்களை பரிசீலிக்காமல், நேரடி தேர்வு வாயிலாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க அனுமதிப்பது நியாயமற்றது. நீண்ட காலமாக இந்தப் பிரச்னை உள்ளது. மனுதாரர்களை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக் கூடாது என, இந்த நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறப்பு பிளீடர் தெரிவித்துள்ளார். விசாரணையை, வரும் 17க்கு தள்ளி வைக்கிறேன். ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.