ADDED : நவ 19, 2024 03:30 AM
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது, பயணியரின் தேவை கருதி, தெற்கு ரயில்வே சார்பில், பல்வேறு வழித்தடங்களில், 50க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருகின்றன.
எனவே, தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், தேவை அதிகமாக உள்ள, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க, தெற்கு ரயில்வேயின் போக்குவரத்து பிரிவு, தலைமை வணிக மேலாளருக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி, நாகர்கோவில் -- தாம்பரம், திருநெல்வேலி - - எழும்பூர், தாம்பரம் -- ராமநாதபுரம், திருநெல்வேலி -- மேட்டுப்பாளையம், தாம்பரம் - கோவை உள்ளிட்ட, 10 வாராந்திர ரயில்கள் டிசம்பர், 3 முதல் பிப்ரவரி, 3 வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன.
இதற்கான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, தெற்கு ரயில்வே விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

