ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 19, 2025 07:58 AM

மதுரை: குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும். தெருக்கள், சாலைகளுக்கு தலைவர்கள், கவிஞர்கள், மலர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதற்கு எதிராக மதுரை பரமசிவம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியதாவது: மக்களிடம் கருத்து கோராமல் அவசரகதியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இன்றி பெயர் மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. பெயர் மாற்றம் செய்வது அரசியலமைப்பு சட்டம், பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டிற்கு எதிரானது.
பாஸ்போர்ட், ஆதார், வருமானவரி, வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதில் மாற்றம் செய்வதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன. ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அக்., 17 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 'அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. முதற்கட்ட அறிவியல் பூர்வ கள ஆய்வு மேற்கொள்ளலாம். அடுத்த கட்ட மேல்நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது,' என இடைக்கால உத்தரவிட்டது.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், ''பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை,'' என்றார். அவகாசம் அளித்த நீதிபதிகள் இடைக்காலத் தடையை நீட்டித்து டிச., 10 க்கு ஒத்திவைத்தனர்.

