மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பு; ரூ.60,000 இழப்பீடு தரும்படி உத்தரவு
மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பு; ரூ.60,000 இழப்பீடு தரும்படி உத்தரவு
ADDED : டிச 09, 2024 04:19 AM
சென்னை : அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட, மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு, 60,330 ரூபாய் இழப்பீடு தரும்படி, 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செம்பியத்தை சேர்ந்த, ஜி.தேவராஜன் தாக்கல் செய்த மனு: பெரம்பூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையில், 2021 ஜூன் 29ல், 'குவார்ட்டர்' மது பாட்டில் வாங்கினேன். அதன் விலை, 180 ரூபாய்; ஆனால் என்னிடம், 200 ரூபாய் வசூலித்தனர்.
இப்படி ஒவ்வொரு மதுக்கடையிலும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக, 10 ரூபாயும், சில கடைகளில், 20 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கின்றனர். கூடுதலாக வசூலிக்கும் தொகையை, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கிட்டு கொள்கின்றனர்.
டாஸ்மாக் மதுக்கடைகளில் விலை பட்டியல் இல்லை. மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தவில்லை.
மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது சேவை குறைபாடாகும். எனவே, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல, கொடுங்கையூர், ஓட்டேரி, குமரன் நகர், பெரவள்ளூர், கொளத்துார், கொசப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளிலும், கூடுதல் பணம் வசூலித்ததாக வழக்குகள் தாக்கல் செய்தார்.
இவ்வழக்குகள் அனைத்தையும், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து, பிறப்பித்த உத்தரவு:
அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட, கூடுதல் பணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தகம். எனவே, கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும்.
சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ஒரு வழக்கிற்கு தலா, 5,000, வழக்கு செலவாக தலா, 1,000 ரூபாய் மற்றும் மதுபாட்டிலுக்கு கூடுதலாக வசூலித்த தொகை என, மொத்தம் 10 வழக்குகளுக்கு, 60,330 ரூபாயை, அந்தந்த டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.