அரசு மருத்துவமனைகளில் கூடுதல் ரோந்து பணி: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் ரோந்து பணி: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
ADDED : நவ 14, 2024 11:44 PM
சென்னை:சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவனையில், புற்றுநோய் துறை தலைவர் டாக்டர் பாலாஜியை, வாலிபர் கத்தியால் குத்திய சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுதும், அரசு மருத்துவமனை பாதுகாப்பு தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகளுடன், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அந்த பகுதிகளில், போலீசார் கூடுதல் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். அதற்கு தேவையான போலீசாரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தில், சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என, கண்காணித்து வெளியேற்ற வேண்டும். மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரோந்து போலீசார், மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இந்த பாதுகாப்பு பணியை, போலீஸ் உயர் அதிகாரிகள், அன்றாடப் பணிகளில் ஒன்றாக கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.