ADDED : மார் 06, 2024 11:31 PM
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியின் சமூக வலைதளப்பதிவு:
புதுச்சேரி மாநிலத்தில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த, ஒன்பது வயது சிறுமி, கொடூர மனம் படைத்த சிலரால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளது, கடும் கண்டனத்துக்கு உரியது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு, போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது. இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அதுவே இதுபோன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும்.
குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில், நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்கிறேன். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி மாநிலம் முழுதும், அண்மைக்காலமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவே, இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருப்பதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க, மாநிலம் முழுதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறுமி படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனையை, புதுச்சேரி மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

